நக்கிள்ஸ் வனப்பகுதியில் குழந்தையுடன் மீட்கப்பட்ட 15 வயதுச் சிறுமி.  பொலிஸ் விசாரணையில் மேலும் அதிர்ச்சித் தகவல்கள்.

காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டு, பின்னர் நக்கிள்ஸ் மலைப்பகுதியில் உள்ள குகைகளில் கைக்குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்ட 15 வயதுச் சிறுமி, குழந்தையைப் பிரசவிப்பதற்கு முன்னரும் பின்னரும் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் நாடாத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இருவரும் மாமாவும் மருமகனும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 வயதுடைய சந்தேகநபர் 2023 ஆம் ஆண்டில் முதன் முதலாக குறித்த சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து 23 வயதுடைய மற்றைய சந்தேகநபரும் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இரு சந்தேகநபர்களும் பல சந்தர்ப்பங்களில் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தகவல்கள் கிடைத்துள்ளன.

சிறுமி கர்ப்பமடைந்த பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு குழந்தையைப் பிரசவித்ததாகவும் விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குழந்தையைப் பிரசவித்த பின்னரும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.