மழை காலங்களில் அதிகம் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கட்டு விரியன் பாம்பு!
இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் ஆபத்தான நான்கு விஷப்பாம்பு வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் கட்டு விரியன் பாம்பு. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக நடமாடக்கூடியது.
இந்தப் பாம்பின் உடலில் கறுப்பு நிறப் பின்னணியில் வெள்ளை நிறக் குறுக்குக் கோடுகள் காணப்படும். உடலில் கட்டுகள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றம் இருப்பதால் இதற்கு கட்டுவிரியன் என்ற பெயர் வந்துள்ளது.
கட்டுவிரியன் பொதுவாக இரவு நேரங்களில் இரை தேடி வெளியே வருகிறது. குறிப்பாக எலிகளை வேட்டையாடுவதற்காக வீடுகளுக்குள்ளும் நுழையக்கூடும். பகல் நேரங்களில் பழைய கட்டிட இடுக்குகள், வளைகள் போன்ற பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்கும்.
இதில் மற்றொரு ஆபத்தான விடயம் என்னவென்றால், இந்தப் பாம்பு பொதுவாக அதிகமாகச் சீறி எச்சரிப்பதில்லை. இதனால் அருகில் பாம்பு இருப்பதையே பலர் அறியாமல் போகலாம்.
மேலும், கட்டுவிரியனின் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால் கண் இமைகள் தளர்வது, பார்வை மங்குவது, பேசுவதிலும் விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுவது, தசைகள் பலவீனமடைவது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
கடுமையான நிலைகளில் சுவாசத் தசைகளும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். குறிப்பாக தூக்கத்தில் கடிக்கப்படும்போது, ஆரம்ப அறிகுறிகளை உணராமல் போகும் அபாயம் இருப்பதால் சிகிச்சை தாமதமாகலாம்.
இரவு நேரங்களில் தரையில் நேரடியாகப் படுத்துத் தூங்குவதைத் தவிர்ப்பதுடன், படுக்கையைப் பயன்படுத்துவது, கொசுவலை கட்டுவது, கதவு மற்றும் ஜன்னல் இடைவெளிகளைப் பாதுகாப்பது, வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் புதர்களை அகற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக, பாம்பு கடித்தால் வலி இல்லாவிட்டாலும் அல்லது அறிகுறிகள் தெரியாவிட்டாலும் உடனடியாக வைத்தியசனைக்குச் செல்ல வேண்டும். விஷத்தை உறிஞ்சுவது, காயத்தைக் கீறுவது அல்லது இறுக்கமாகக் கட்டுவது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.


