அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சாண்ட்பேப்பர் விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ள உஸ்மான் கவாஜாவுக்கு முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வொட்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


உஸ்மான் கவாஜா இந்த விவகாரத்தை மீண்டும் பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் என்ன எனத் தனக்குப் புரியவில்லை என்று தெரிவித்துள்ள ஷேன் வொட்சன் இந்தச் சம்பவத்தால் விதிக்கப்பட்ட தடைகள் கவாஜாவுக்குச் சாதகமாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் அந்த மூன்று வீரர்களுக்கும் தடைகள் விதிக்கப்பட்டதால் உஸ்மான் கவாஜாவுக்குத் தொடர்ச்சியாக அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

அவர் அதனை அப்படிப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் அவருக்குச் சாதகமாக அமைந்தன என்பதே எனது கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அக்காலகட்டத்தில் கவாஜா அவுஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கே போராடிக் கொண்டிருந்ததாகவும் வொட்சன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தால் அவரால் சிறப்பாகச் செயற்பட முடியும் என்ற திறமை ஏற்கனவே இருந்ததாகவும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் பெற்ற வெற்றி ஒரு குறிப்பிடத்தக்க மீள்வருகைக் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவரும் 12 மாதத் தடையை எதிர் கொள்ளாமல் இருந்திருந்தால் கவாஜாவுக்கு அதே அளவிலான வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்பதும் கேள்விக்குரியது என வொட்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து யாராவது வெளிப்படையாகப் பேச வேண்டுமென்றால் அந்தச் சம்பவத்தால் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிய ஸ்மித், வோர்னர் அல்லது பான்கிராஃப்ட் ஆகிய மூவரில் ஒருவரே அதனைச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாண்ட் பேப்பர் சர்ச்சை முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதனைச் சுற்றிய கருத்து மோதல்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.