வரலாற்றுச் சாதனை படைத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும் விதமாக 22 மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பிய 52 மீட்டர் உயரமுள்ள ஸ்டார்ஷிப் 15 விண்கலத்தை ஏவுதளத்தில் உள்ள ராட்சத இயந்திரக் கைகள் மூலம் அந்தரத்திலேயே லாவகமாகப் பிடித்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.


வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஸ்டார் பேஸ் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 15 விண்கலம் சுமார் 260 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை 14 முறை சுற்றிவந்தது.

இந்தப் பயணத்தின்போது 26 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை (Star Link Satellite) வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.


22.5 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சனிக்கிழமை நவம்பர் 14 பூமிக்குத் திரும்பத் தொடங்கிய ஸ்டார்ஷிப் 15 விண்கலம் மணிக்கு சுமார் 17,000 மைல் வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. கடும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு கீழே இறங்கிய விண்கலம் ஏவுதளத்திற்கு அருகே வந்ததும் தனது என்ஜின்களை மீண்டும் இயக்கி செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் ஏவுதளக் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட இயந்திரக் கைகள் விண்கலத்தின் மேற்பகுதியில் இருந்த கொக்கிகளைத் துல்லியமாகப் பற்றிக்கொண்டு தரையிலிருந்து சில நூறு அடிகள் உயரத்தில் அதனை அந்தரத்தில் நிறுத்தின. விண்வெளிப் பயணத்தின் கடும் வெப்பத்தால் கருகிய நிலையில் இருந்த விண்கலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை ராக்கெட் ஏவப்பட்ட 10-வது நிமிடத்தில் அதன் கீழ்ப்பகுதியான சூப்பர் ஹெவி பூஸ்டர் ஏவுதளத்திற்குத் திரும்பும் முயற்சியில் தோல்வியடைந்தாலும் மேல் பகுதியான ஸ்டார்ஷிப் 15 விண்கலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டிருப்பது பொறியியல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மீட்கப்பட்ட விண்கலத்தை ஆய்வு செய்த எலான் மஸ்க், ஷிப் 42 மிகச்சிறப்பாக உள்ளது எனத் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவிட்டுள்ளார்.


தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல் பகுதியை மட்டுமே மீண்டும் பயன்படுத்த முடியும் இரண்டாம் பகுதி கடலில் வீழ்த்தப்பட்டு விடுகிறது. ஆனால், வணிக ரீதியிலான பயணிகள் விமானத்தைப் போல சிறிய அளவிலான பராமரிப்புக்குப் பிறகு முழு ராக்கெட்டையும் மீண்டும் மீண்டும் விண்ணுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எலான் மஸ்கின் இலக்காகும்.

இருப்பினும், ஒரே பயணத்தில் ராக்கெட்டின் இரண்டு பகுதிகளையும் மீட்பது மற்றும் வளிமண்டல வெப்பத்தைத் தாங்கும் கறுப்பு நிற அறுகோண வெப்பத் தகடுகளை முழுமையாக மறுபயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துவது ஆகிய சவால்கள் இன்னும் உள்ளன.

ஸ்டார்ஷிப் திட்டத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இதுவரை 15 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் 2028-ஆம் ஆண்டில் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸின் புளூ ஆரிஜின் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக விண்வெளியில் ஒரு ஸ்டார்ஷிப் டேங்கரிலிருந்து மற்றொன்றுக்கு எரிபொருள் நிரப்பும் சிக்கலான தொழில் நுட்பத்தை ஸ்பேஸ் எக்ஸ் அடுத்து நிரூபிக்க வேண்டியுள்ளது.

இந்த வெற்றி எதிர்காலத்தில் விண்வெளியில் டேட்டா சென்டர்கள் அமைப்பது, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவது ஆகிய எலான் மஸ்கின் பிரம்மாண்ட கனவுகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.